கோடை காலத்தில் நமது உடலில் உள்ள தாது உப்புக்கள் வியர்வை மூலம் அதிகமாக வெளியேறி விடுகிறது, அதனால் தான் நமக்கு விரைவில் சோர்வு ஏற்படுகிறது. இதற்கு செயற்கை குளிர்பானங்கள் எந்தவிதத்திலும் பலனளிக்காது. மேலும் கேஸ் அதிகமுள்ள குளிர்பானங்கள் உடலுக்குக் கேடு செய்யும். அதற்கு பதில் பழங்கள், சுத்தமான தண்ணீர் கொண்டு தயாரிக்கப்படும் பழரசங்கள், காய்கறி சாலட் இவை நல்ல பயன் தரும். அதுமட்டுமின்றி தேவையான விட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களுடன் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளை வீட்டிலே தயாரித்து சாப்பிடுவது மிக நல்லது.
கேழ்வரகு கூழ்
முதல் நாளே ஒன்றரை ஆழாக்கு மாவுடன் நாலரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். அரை ஆழாக்கு அரிசி நொய்யுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். பாதி வெந்ததும் கரைத்த கேழ்வரகு மாவை ஊற்றிக் கைவிடாமல் கிளறவும். மாவு வெந்து பளபளவென்று வந்ததும் உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும். மறுநாள் காலை கடைந்த தயிர், அரிந்த வெங்காயம் இரண்டையும் கலந்து சாப்பிடவும்.
கம்பங் கூழும் இதே முறையில் செய்து சாப்பிடலாம். இதுவும் உடலுக்குக் குளிர்ச்சியும் திடமும் சேர்க்கும்.
சுரைக்காய்க் கூட்டு
சுரைக்காயை சிறு துண்டுகளாக்கி தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைக்கவும். 200 மில்லி குளிர்ந்த பாலுடன் ஒரு மேசைக் கரண்டி அரிசி மாவைக் கரைத்து ஊற்றவும். கொஞ்சமாக உப்புச் சேர்க்கவும். எண்ணெயில் சீரகம், மிளகாய் 4, பூண்டு 15 பல் மற்றும் கருவேப்பிலைச் சேர்த்து தாளிக்கவும். மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் வெயிலுக்கேற்ற சிறந்த உணவாகும்.
வடுமாங்காய் தயிர்பச்சடி
2 மாங்காய்களை பொடியாக நறுக்கி, 2 பச்சை மிளகாய், துருவிய தேங்காய் அரை மூடி, ருசிக்கேற்ப உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு, கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பரிமாறுவதற்கு முன் புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலக்கவும். விட்டமின் நிறைந்தது இந்த உணவு.
மாங்காய்-நெல்லிக்காய் மோர்
ஒரு பெரிய நெல்லிக்காயின் விதையை நீக்கி, மாங்காய் கால் துண்டு, கொத்துமல்லித் தழை கைப்பிடி அளவு, இஞ்சி சிறிதளவு, கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கால் லிட்டர் தயிர் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும். பின்னர் வடிகட்டி கடுகு, பெருங்காயம் தாளித்து அருந்தவும். இதிலுள்ள விட்டமின் சி உடலுக்கு உடனடி எனர்ஜி அளிக்கக் கூடியது.
மோர்க் குழம்பு
ஒரு ஸ்பூன் அரிசியை ஒரு ஸ்பூன் துவரம் பருப்புடன் நன்கு ஊற வைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு, கொஞ்சம் இஞ்சி, 4 பச்சை மிளகாய் வதக்கி சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். கடாயில் கடுகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து பூசணிக்காயை சிறிய துண்டுகளாக்கி நன்கு வதக்கி அரைத்து வைத்துள்ள அந்த கலவையை சேர்த்து சிறிது வேகவிட வேண்டும். பின்னர் தண்ணீர் ஊற்றாமல் கடைந்த தயிருடன், மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து அந்த கலவையில் ஊற்றி ஒரு கொதி விடவும். இறக்கும் போது கொத்துமல்லித் தழைச் சேர்த்து இறக்கி வேண்டுமானால் கூட கொஞ்சம் கெட்டித் தயிர் சேர்த்து சாப்பிடலாம். நீர்க்காயான பூசணி வெயிலுக்கேற்றது.
நன்றி
தினகரன்

Post a Comment