0

100 வயதைக் கடந்தும் ஆரோக்கியமாக இருப்பவர்களைப் பற்றிய அரிய செய்திகளை அவ்வப்போது கேள்விப்படுகிறோம். ஒருசிலருக்கு மட்டும் அது எப்படி சாத்தியப்படுகிறது என்கிற  கேள்வி பலர் மனதிலும் கண்டிப்பாக இருக்கும். மனிதன் நோய்கள் இல்லாமல் வாழ ஒரு ரகசிய சூத்திரத்தை ஆயுர்வேதத்தின் தந்தையான சரகர் குறிப்பிட்டுள்ளார்... ‘ஹிதஹாரி, மிதஹாரி, ருதுஹாரி சதா நிரோகி! அதாவது, எவன் ஒருவன் ஊட்டச்சத்தான உணவை உண்கிறானோ, கொஞ்சமாகச் சாப்பிடுகிறானோ, பருவகாலங்களுக்கேற்ற உணவைச் சாப்பிடுகிறானோ, அவன் எப்போதும் நோய்கள் அற்றவனாக இருப்பான்’ என்பதே அதன் அர்த்தம்.

100 ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டிய உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றிய நம் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் வாழ்வியல் மேலாண்மை மற்றும் ஆன்ட்டி ஏஜிங் நிபுணர் டாக்டர்  கெளசல்யா நாதன்.

“தலை சிறிது நரைத்து, முகம், கை கால்களில் சிறிது மாற்றங்கள் ஏற்படும் போதுதான் நமக்கு வயதாகிவிட்டது என்பதையே உணரத் தொடங்குகிறோம். வயதைத் தள்ளிப் போடுவது என்பது  நீண்ட நாள் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு முயற்சி.  சிறு வயதிலிருந்தே அன்றாட வாழ்க்கை முறையில் சின்னச் சின்ன விஷயங்களை கடைப்பிடித்து வந்தாலே என்றும் இளமையோடு வாழலாம். வயதைப் பொறுத்த வரை உள் உறுப்புகள் மற்றும் வெளிப்புறத் தோற்றம் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.

உடலில் உள்ள ஹார்மோன்கள் குறையத் தொடங்கும்போதுதான், உள் உறுப்புகளும் வெளித் தோற்றமும் வயதான நிலையை அடைகின்றன.  ஹார்மோன்கள் குறைய ஆரம்பிக்கும் போதே மருத்துவரிடம் சென்று முன்கூட்டியே சிகிச்சைகளை தொடங்க வேண்டும். க்ரீம்களை போட்டுக் கொள்வதாலோ, ஜூஸ் குடிப்பதாலோ ஒருவர் தன் வயதை குறைத்துக் கொள்ள முடியாது.  ஆரோக்கியமான உணவுகளை அளவோடு உண்ணும்போதுதான் இளமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

சைவமோ, அசைவமோ - யாராக இருந்தாலும் அதிக கலோரி உள்ள உணவை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது இன்சுலின் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இதனால் சீக்கிரமே உடல் சோர்ந்து கவனச்சிதறல் ஏற்படும். குறைவான கலோரி என்பதைவிட ‘கலோரி கட்டுப்பாடு’ மிகவும் சிறந்தது. கலோரி கட்டுப்பாட்டின் மூலம் நம் ஆயுளை கூட்ட முடியும் என்பது அமீபியா முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களிடத்திலும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அதனால்தான் நம் இந்தியாவில் 3 மதங்களிலும் ‘நோன்பு’ ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். கிறிஸ்தவ மதத்தில் ஈஸ்டர் ஃபாஸ்டிங், இஸ்லாம் மதத்தில் ரமலான் நோன்பு, இந்து மதத்தில் அமாவாசை போன்ற விரத தினங்களை கடைப்பிடித்தனர். விரத நாட்களில் ஒருவேளை உணவு, உண்ணா நோன்பு போன்றவற்றை பின்பற்றினார்கள்.

இன்றோ மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றும் நாம், விதவிதமான உணவுகள் ரெடிமேடாக கிடைப்பதால் எந்தவித கட்டுப்பாடும் இன்றி, இரவு பகல் பாராது எல்லா நேரத்திலும் சாப்பிடுகிறோம். உணவை அளவுக்கு மீறி உண்பதன் மூலம், உணவிலுள்ள ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொண்டு கழிவுகளை நீக்கும் பணியைச் செய்யும் செரிமான மண்டலத்துக்கு அதிகப்படியான வேலை கொடுக்கிறோம். விரதம் இருக்கும்போது உடலில் உள்ள விஷங்கள் நீங்கி தேவையான ஆற்றலை பெற முடியும். இது வளர்சிதை மாற்றத்தை முன்னேற்றமடையச் செய்து எலும்பு வலுவிழப்பை தடுக்கிறது.

கேன்சர் நோயைக் கட்டுப்படுத்துவதோடு நினைவாற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது. எடையை சீராக பராமரிக்க முடிவதால் சர்க்கரை, ரத்தக்கொதிப்பு ஆகியவையும் கட்டுக்குள் வரும். வாழ்வியல் முறைகளில் யோகா, சூரியநமஸ்காரம் போன்ற உன்னதமான முறைகளை நம் முன்னோர் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். யோகா பயிற்சி உடல்நலத்துடன் மனநலத்தையும் தரவல்லது. நமது மூளையில் ஆல்ஃபா, பீட்டா அலைகள் உள்ளன. நம் மனம் அமைதி இன்மை, பீதி, பதற்றம் போன்ற நிலையில் இருக்கும்போது பீட்டா அலைகள் உயர் அதிர்வெண்களை கொண்டிருக்கும்.

ஸ்ட்ரெஸ் ஹார்மோனான கார்டிசோல் அளவு மன அழுத்தத்தின் போது அதிகரிக்கும். யோகா பயிற்சியை எடுத்துக் கொள்ளும் போது கார்டிசோல் சுரப்பு குறைந்து மன அமைதி ஏற்படுகிறது. யோகப்பயிற்சி ஒவ்வொருவரின் சுயமதிப்பைக் (Self esteem) கூட்டி, படபடப்பை நீக்கி  கவலைகளை அழிக்கிறது. உறக்கத்துக்குக் காரணமான மெலட்டனின் அதிகமாக சுரந்து நிம்மதியான உறக்கம் பெற முடியும். நல்ல உறக்கம் நினைவாற்றலை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். இதனால் சருமம் சுருங்குவதைத் தவிர்த்து, நம் முதுமையை உள் மற்றும் வெளித்தோற்றத்தில் தள்ளிப் போடலாம்.

சிலர் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பார்கள். உடற்பயிற்சி என்பதையே இவர்கள் உடல் அறிந்திருக்காது. இது தவறானது. உடலுக்கென்று  தினமும் சிறிது நேரம் ஒதுக்கினால் வாழக்கூடிய நாட்களில் பல மணி நேரத்தை சேமிக்க முடியும். உடற்பயிற்சி என்றதும் ஜிம்முக்கு போய் ‘சிக்ஸ் பேக்’ எல்லாம் வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. தினசரி அரை மணி நேரம் நல்ல வேகமான நடைப்பயிற்சியே போதுமானது. எந்த ஒரு புது முயற்சியும் ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். நாம் மனம் தளராமல் விடா முயற்சியுடன் அதைத் தொடர்ந்தால் நிறைவான பல நன்மைகளை அடைவோம். பழக்கம் வழக்கமாகி விடும்” என்று அறிவுறுத்துகிறார்.

- உஷா

நன்றி
தினகரன்

Post a Comment

 
Top