0

தகிக்கும் கோடை வெயிலால் ஏற்படும் நோய்களில் இருந்து செலவில்லாமல் தப்ப பல எளிய வழிமுறைகள் பல உள்ளன. இதுகுறித்து நெல்லை அரசு சித்த மருத்துக் கல்லூரி மருத்துவர் சுபாஷ்சந்திரன் கூறியதாவது:  கோடை வெயில் நேரத்தில் பிரிட்ஜில் வைக்கப்படும் குளிர்ந்த நீரைபருகக்கூடாது. இதற்குப் பதிலாக மண் பானையில் நன்னாரி வேர்களைப் போட்டு அதில் சுத்தமான தண்ணீரை நிரப்பி இதை அதிகம் பருக வேண்டும்.
இதனால் உடல்சூடு தணிவதுடன் பித்தம் மட்டுப்படுத்தப்படும். வழக்கமாக பருகும் தண்ணீரின் அளவை விட கூடுதலாக இரண்டு மடங்கு பருக வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போதும் நன்னாரி குளிர் நீரை எடுத்துச் சென்று அருந்த வேண்டும்.
வியர்வையால் தோல்களில் வியர்க்குரு உள்ளிட்ட சருமநோய்கள் ஏற்படும். இதை தவிர்க்க அருகம்புல் சாறு எடுத்து சமளவு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தைலம் தயாரித்து உடலில் பூசலாம். உணவில் ஜீரகம், காய்கள், கனி வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

உடல் சூட்டால் ஏற்படும் மூல நோய் தவிர்க்க அதிக தண்ணீர் பருகுவதுடன் எலுமிச்சை ஜூஸ் பருக வேண்டும். நீரிழிவு வியாதி இருப்பவர்கள் எலுமிச்சையில் சர்க்கரைக்குப் பதில் உப்பு சேர்த்து பருகலாம். நார்ச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.  காரமான உணவுகளை குறைக்க வேண்டும்.

அதிக வியர்வை ஏற்படும் நேரங்களில் கூடுதலாக தண்ணீர் பருகி உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக கடைந்த மோர், சிறிய வெங்காயம், வெள்ளரிப்பிஞ்சு ஆகியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். செரிமான சக்தி குறைவாக உள்ள திட மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து நீர் சத்துள்ள உணவுகளை  எடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி
தினகரன்

Post a Comment

 
Top