0


இந்த வருட கோடை வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்றாலும், ஓரளவு சமாளித்துவிடலாம். ஏனென்றால், மே மாதம் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனாலும், நிச்சயம் மழை பெய்யுமா எனக் கேட்டால் அதுவும் சந்தேகம்தான். புயலோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமோ வங்கக் கரையில் உருவானால் கூட, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதனால்  குறைந்தது 2 முறை மழை பெய்தால் மட்டுமே, மே மாத வெயிலில் இருந்து தப்பிக்க முடியும்.
ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களைத்தான் கோடைகாலம் என சொல்வோம். பொதுவாக ஏப்ரலிலும் மேயிலும் இருக்கும் வெக்கை ஜூன் மாதத்தில் குறைந்துவிடும். இருந்தாலும், ஜூனில் அடிக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கசகசப்பும் புழுக்கமும் இருந்து கொண்டே இருக்கும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வானத்தில் மேகங்களின் அளவு குறைவாக இருக்கும். இதனால், இரவின் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும். சென்னையில் இரவு வெப்பநிலையே 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது.

அதனால்தான் இரவிலும் புழுக்கமும் வியர்வையும் அதிகமாக இருக்கிறது. ஏப்ரலில் அதிகபட்சம் சென்னையை பொறுத்தவரை 37 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். மே மாதத்தில் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் செல்ல வாய்ப்புள்ளது.  மே மாதத்தை பொறுத்தவரை மழையும், சரியான அளவு காற்றும் அடிக்கா விட்டால் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை உயர வாய்ப்புள்ளது.

சென்ற வருடம் அதிகமாக மழை பெய்ததால்தான் இந்த வருடம்  அதிக வெயில் அடிக்கும் என்று சொல்வது  தவறானது. அப்படிப் பார்த்தால் கேரளாவில் மழை குறைவு. ஆனால், அங்கேயும் இதே அளவு வெயில் இருக்கிறது. பொதுவாக, எல்நினோ வந்துவிட்டுப் போன மறுவருடம் வெயில் அதிகம் இருக்கும். இதுக்கு துல்லியமான காரணம் சொல்ல முடியாது. இதை இயற்கையின் டிசைன் எனச் சொல்லலாம். 1997 என்பது எல்நினோ வருடம். அதற்கு அடுத்த ஆண்டான 1998ல், அதிக வெயில். தாக்குப் பிடிக்க முடியாமல் நிறைய பேர் இறந்தார்கள்.

2002லும் எல்நினோ வருடம் வந்தது. 2003ல் 45 டிகிரி அடித்தது. அதுதான் தமிழ்நாட்டின் உச்சபட்ச வெயில்! அதே டிகிரி அளவுக்கு இந்த வருடமும் போகலாம்.  இந்த ஜனவரியில இருந்து வெயிலின் அளவை தொடர்ச்சியாக கண்காணித்துக் கொண்டு இருக்கிறேன். சென்ற வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் உள்ள வித்தியாசம் ஒரு டிகிரி கூடுதலாக இருக்கிறது. இது ஏப்ரலில் 2 டிகிரியாக உயரும்.

அதே நேரம், மே மாதம் நமக்கு ‘ப்ரீ மான்சூன் டைம்’ தொடங்கிவிடும். வழக்கமாகவே இந்த காலத்தில் மழை இருக்கும். இதை நாம் ‘மாங்கோ ஷவர்ஸ்’ எனச்  சொல்வோம். கர்நாடகாவில் ‘பிளாஸம் ஷவர்ஸ்’ எனச் சொல்வார்கள். இந்த மே மாதம் காற்றழுத்தத் தாழ்வோ, புயலோ வங்களா விரிகுடாவில் உருவாகி மழையை உண்டு பண்ணலாம். மாறாக, அரபிக் கடலில் கூட  உருவாகலாம். எப்படியிருந்தாலும் தமிழ்நாட்டுக்கு மே மாதம் மழை நிச்சயம்!  கோடையில எப்படி மழை வரும் என சிலர் கேட்கலாம். கடந்த 2010ல் மே 19ம் தேதி ‘லைலா’ புயல் வந்ததே! அதுமாதிரிதான்!

இன்றைய ஏப்ரல் நிலவரப்படி பார்த்தால் கூட தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட சென்னையின் வெப்பநிலை குறைவாகவே உள்ளது. பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில் உள்ள வான் பரப்பிலும், வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம்தான் எல் நினோ. El Nino-Southern Oscillation (ENSO) என்பது இதன் விரிவாக்கம்.

எல் நினோ உருவாகும்போதெல்லாம் கடுமையான மழையும், தாங்க முடியாத வறட்சியும் என எதிர்மறையான தட்பவெப்பத்தை பல பகுதிகளில் உருவாக்குகிறது.  மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் இந்த கோடையில் வெப்பத்தின் அளவு குறைவாகத்தான் இருக்கும். அதனால் மக்கள் பயப்படத் தேவையில்லை. மதிய நேர வெயிலில் வெளியே போகாமல் இருப்பதும், நீர் சத்துள்ள பானங்களை அடிக்கடி அருந்தி வந்தாலும், இக்கோடையை இனிமையாக கழித்துவிடலாம்...’’

மே மாதங்களில் அதிக வெப்பநிலை!

அதிராமபட்டினம்     - 42oC     - 5 மே 1976
சென்னை     - 45oC     - 31 மே 2003
கோயம்புத்தூர்    - 40.3oC     - 5 மே 1983
விமான நிலையம்     - 41.2oC     - 5 மே 1983
குன்னூர்     - 29.4oC     - 7 மே 1931
கூடலூர்     - 43.3oC     - 13 மே 1953
தர்மபுரி     - 41.1oC     - 3 மே 1991
கள்ளக்குறிச்சி     - 44.2oC     -    6 மே 1975
கன்னியாகுமரி     - 38.2oC     -  15 மே 1973
காரைக்குடி     - 42.7oC     - 28 மே 1980
கரூர் பரமத்தி     - 42oC     - 5 மே 1985
கொடைக்கானல்     - 27.8oC     - 5 மே 1923
மதுரை     - 44.5oC     - 25 மே 1976
விமான நிலையம்     - 43.4oC     - 30 மே 1998
மேட்டூர் அணை     - 42.4oC     - 3 மே 1993
நாகப்பட்டினம்     - 42.8oC     - 15 மே 1898
பாளையங்கோட்டை     - 42.8oC     - 9 மே 1966
பாம்பன்     - 38.8oC     - 16 மே 2010
பரங்கிப்பேட்டை     - 43.5oC     - 25 மே 1980
சேலம்     - 42.8oC     - 22 மே 1931
தஞ்சாவூர்     - 43.4oC     - 15 மே 1989
விமான நிலையம்     - 43.3oC     - 2 மே 1896
திருப்பத்தூர்     - 46.3oC     - 7 மே 1976
திருத்தணி     - 48.6oC     - 29 மே 2003
தொண்டி     - 40.1oC     - 16 மே 1966
தூத்துக்குடி     - 41.1oC     - 14 மே 1956
ஊட்டி     - 28oC     - 5 மே 1993
வேதாரண்யம்     - 39.8oC     - 3 மே 2005
வேலூர்     - 45oC     - 31 மே 2003

நன்றி
தினகரன்

Post a Comment

 
Top