0





கொளுத்தும் கோடை வெயிலில் வெளியே செல்லும்போது மயக்கம், உடல் சோர்வு போன்றவை ஏற்படும். அதிக வெயில் காரணமாக நீர் இழப்பு ஏற்படுவதால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கிறது. இதனால் சோர்வு,  மயக்கம் ஏற்படும் நிலை உண்டாகிறது. புளியங்கொட்டையை பயன்படுத்தி நீர் இழப்பை சமன் செய்யும் தேனீர் தயாரிக்கலாம்.

புளியங்கொட்டையை 2 நாட்கள் தண்ணீரில் ஊற வைத்தால், அதன் தோல் பிரிந்து விடும். பின்னர்,புளியங்கொட்டையை காயவைத்து வறுத்து பொடியாக்கி கொள்ளவும். அரை ஸ்பூன் புளியங்கொட்டை பொடியுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இந்த தேனீரை குடித்துவர கோடைகாலத்தில் ஏற்படும் நீரிழப்பு சமன் செய்யப்படுகிறது. புத்துணர்வு ஏற்படும். உடல் குளிர்ச்சி அடைவதுடன் சத்துக்களும் கிடைக்கிறது. உடல் பலம் பெறுகிறது.

வெந்தயத்தை பயன்படுத்தி உடல் வெப்பத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். வெந்தயத்தை வறுத்து பொடி செய்து எடுத்து கொள்ளவும். அரை ஸ்பூன் வெந்தயப் பொடியுடன் சிறிது நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பசை போன்று வந்தவுடன் எடுத்து தேன் சேர்க்கவும். வெயில் காலத்தில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உஷ்ணம் குறையும். மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

மாங்காயை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாங்காய், பனங்கற்கண்டு, உப்பு, மிளகுப் பொடி, சீரகப் பொடி. மாங்காய் துண்டுகளை நீர்விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு டம்ளரில் பனங்கற்கண்டு, உப்பு, ஒரு சிட்டிகை மிளகுப் பொடி, சிறிது சீரகப் பொடி எடுத்து கொள்ளவும்.

இதில் குளிர்ந்த நீர்விட வேண்டும். இதனுடன் வேகவைத்த மாங்காய் துண்டுகளை போடவும். இந்த தேனீரை எடுத்துக் கொள்ளும்போது நீர் இழப்பு சமன் செய்யப்படும். உடலில் ஏற்படும் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். மாங்காயில் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. மாங்காயை குறைவாக சாப்பிடும்போது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். 

அன்னாசியை பயன்படுத்தி தலைசுற்றலுக்கான மருந்து தயாரிக்கலாம். அன்னாசி பழச் சாறில் சிறிது நீர்விட்டு சீரகப்பொடி, நாட்டு சர்க்கரை சேர்க்கவும். இதை நன்றாக கலந்து குடிக்கும்போது வெயிலால் ஏற்படும் தலை சுற்றல், வாந்தி, மயக்கம், குமட்டல் சரியாகும். அன்னாசி பழம் அற்புதமான மருந்தாகிறது. உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் நீர் இழப்பை சமன் செய்கிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிப்பதுடன் வயிற்று வலியை குணமாக்குகிறது.

நன்றி
தினகரன்

Post a Comment

 
Top